முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்
சென்னை, 22 மே (ஹி.ச) தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங
John


சென்னை, 22 மே (ஹி.ச)

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய் முயற்சி மேற்கொண்ட நிலையில், அதில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து கடந்த மே 10-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அவருடன் தவெக இரண்டாம் கட்ட தலைவர்களான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா வெங்கட்ரமணன் உள்ளிட்ட 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட அமைச்சரவை பதவியேற்பு விழாவில் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று மூன்றாவது கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் அக்கட்சிகளின் உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். விசிக சார்பில் வன்னி அரசு, ஐயூஎம்எல் சார்பில் ஷாஜஹான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த பதவியேற்பு விழா ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழக அரசின் ஆட்சி நிர்வாகத்தில் முதல்வர் விஜய் பெரிய அளவிலான மாற்றங்களை செய்து வருகிறார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக மாற்றப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பல்வேறு துறை சார்ந்த செயலாளர்களும் மாற்றப்பட்டு உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக அவருடைய ஜோதிடரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளருமான ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது பிரேமலதா விஜயகாந்த், தமிமுன் அன்சாரி, வன்னி அரசு உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் விஜய் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஜோதிடரும் தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளருமான ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பை முதல்வர் விஜய் திரும்ப பெற்றார்.

இந்நிலையில் தான் தமிழக முதலமைச்சரின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN