Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மே (ஹி.ச.)
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியான வளைவுகளை சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, அமலில் இருந்த வேகக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், 2025-26 ஆம் நிதியாண்டில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தண்டவாள மேம்பாடு போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொண்டது. இதன் மூலம், முக்கிய ரயில் வழித்தடங்களில் நடைமுறையில் இருந்த பல நிரந்தர வேகக் கட்டுப்பாடுகள் (PSRs) தளர்த்தப்பட்டுள்ளன.
வழித்தடங்களின் திறனை மேம்படுத்தவும், ரயில்களை இயக்குவதில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், ரயில்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்யவும் சென்னை கோட்டம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
தண்டவாளங்களைப் புதுப்பித்தல், அடித்தளங்களை வலுப்படுத்துதல், வளைவுகளைச் சீரமைத்தல், இடைநிலை மாற்றங்களைச் சரிசெய்தல் (transition corrections) பயண தரநிலைகளைத் (riding quality standards) தொடர்ச்சியாகக் கண்காணித்தல் உள்ளிட்டவற்றில் பொறியியல் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.
இந்த மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் பிரிவில், வளைவுகளில் (reverse curves) மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடர்ந்து, முன்பு வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட சில இடங்களில் அனுமதிக்கப்பட்ட ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - கூடூர் பிரிவில், நாயுடுபேட்டை - தொரவாரி சத்ரம் மற்றும் சூளூர்பேட்டை - பொலிரெட்டிபாலம் ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள கூர்மையான வளைவுகள் மற்றும் பலவீனமான அடித்தளப் பகுதிகளில் வலுவூட்டல் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அங்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு வேகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இப்பகுதிகளில் ரயில்களின் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 110 கிலோமீட்டரிலிருந்து (kmph) 125 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை எழும்பூர் - விழுப்புரம் பிரிவில், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் இடையே பொறியியல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட வளைவு சீரமைப்பு மேம்பாட்டுப் பணிகளைத் தொடர்ந்து வேகக் கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை கடற்கரை - சென்னை எழும்பூர் பிரதான வழித்தடப் பிரிவிலும் (Main line), வளைவு வடிவியலில் (reverse curve geometry) திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் வேகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இது இப்பகுதியில் புறநகர் ரயில் சேவைகள் தடையின்றி சீராக இயங்க வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN