சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
சென்னை, 22 மே (ஹி.ச.) சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த 810 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 81
School


சென்னை, 22 மே (ஹி.ச.)

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த 810 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 81 பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 7 ஆயிரத்து 81 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இதில் 6 ஆயிரத்து 271 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 810 பேர் தோல்வியடைந்துள்ளனர். இவர்களில் 396 மாணவர்களும், 414 மாணவிகளும் அடங்குவர்.

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வுகளில் பங்கேற்க வைத்து தேர்ச்சி பெறச் செய்வதற்கான நடவடிக்கைகளில் மாநகராட்சி கல்விப் பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஏற்கெனவே பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் பள்ளிவாரியாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அதேபோன்ற பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்விப் பிரிவு இணை ஆணையர் கற்பகம், பள்ளிவாரியாகவும் பாடவாரியாகவும் தோல்வியடைந்த மாணவர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து சிறப்பு வகுப்புகளை தொடங்க அறிவுறுத்தியுள்ளார்.

ஓரிரு நாள்களில் இந்த சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும், மாணவர்கள் இந்த ஆண்டிலேயே இடைத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பை உருவாக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ