Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மே (ஹி.ச)
மகனுக்கு சிறுநீரகம் தானம் வழங்க விரும்பும் தாய், தங்கள் உறவை நிரூபிக்க மரபணு பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த ரோஹித்குமார் சவுராச்யா, சென்னை பெருங்குடியில் உள்ள அப்போலோ மருத்துவமனை மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அவரது தாய் ரீட்டா சவுராச்யா சிறுநீரக தானம் வழங்க முன்வந்தார்.
ஆனால், தாய் - மகன் உறவை போதுமான முறையில் நிரூபிக்கவில்லை எனக் கூறி, தமிழக அரசின் உடலுறுப்பு மாற்று அங்கீகார குழு அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்க மறுத்தது.
இதனை எதிர்த்து ரீட்டா சவுராச்யா மற்றும் ரோஹித்குமார் சவுராச்யா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், தாய் - மகன் உறவை நிரூபிக்கும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப புகைப்படங்கள் மற்றும் நிரந்தர கணக்கு எண் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டும், அங்கீகார குழு அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ரோஹித்குமாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ரீட்டா சவுராச்யாவின் மகன் ரோஹித்குமார் என்பதில் திருப்தி அடைவதாக குறிப்பிட்டார்.
இதனை நிரூபிக்க மரபணு பரிசோதனை அவசியமில்லை எனத் தெரிவித்த நீதிபதி, ஒரு வாரத்திற்குள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்க உடலுறுப்பு மாற்று அங்கீகார குழுவுக்கு உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ