Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மே (ஹி.ச)
சென்னை கிண்டியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தில், 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்களாக பதவியேற்றுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து வ.உ.சி சிதம்பரனார் நினைவிடம், அண்ணல் காந்தி நினைவிடம், ராஜாஜி நினைவிடம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் நினைவிடங்களிலும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேஷ்குமார்,
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணியின் நம்பிக்கையால் தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அமைச்சரவை வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
காமராஜர் ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரின் கனவு” என்றும் கூறினார்.
திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
காங்கிரஸ் கட்சி விமர்சனங்களை கண்டு அஞ்சுபவர்கள் அல்ல. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடி நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த கட்சி காங்கிரஸ் என்று தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை என்ற கருத்தை ராகுல் காந்தி தவறாக நிரூபித்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் ஜனநாயக மாற்று அரசியல் உருவாகியுள்ளது” என்று கூறினார்.
மேலும், உயர்கல்வித்துறை சவாலான துறையாக இருந்தாலும், வழங்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுவேன்.
லஞ்சம், ஊழல் இல்லாமல் நேர்மையாக செயல்படும் அமைச்சர்களாக பெயர் பெறுவதே எங்களின் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ