Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 22 மே (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், கடந்த 19 ஆம் தேதி ஆட்டோவில் தேவகோட்டை நகருக்கு வந்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது ஆட்டோ ஓட்டுநர் தங்கசாமி என்ற மாதவன், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆட்டோவை நிறுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் கீதா லட்சுமியிடம் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அவரது புகாரை பெறாமல் தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் அளிக்குமாறு கூறியதாக தெரிகிறது.
பின்னர், தேவகோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் துரைராஜிடம் புகார் அளித்த போதும், அவர் மீண்டும் மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் தேவகோட்டை டிஎஸ்பி மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகி மதுரை தென் மண்டல ஐஜி விஜேந்திர பிதாரியிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில், விசாரணையில் அலட்சியம் மற்றும் புகாரை சரிவர கையாளாதது உறுதியானதாக தெரிகிறது.
கீதா லட்சுமி – காவல் ஆய்வாளர், தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம்
துரைராஜ் – காவல் ஆய்வாளர், தேவகோட்டை நகர் காவல் நிலையம்
ராஜேஸ்வரி – சிறப்பு சார்பு ஆய்வாளர் (SSI)
ஜெயா – சிறப்பு சார்பு ஆய்வாளர் (SSI)
சந்தானம் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலக தனிப்பிரிவு காவலர்
இதனையடுத்து தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சீதாலட்சுமி, தேவகோட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் துரைராஜ், பெண் உதவி ஆய்வாளர்கள் ஜெயா மற்றும் ராஜேஸ்வரி, தனிப்பிரிவு காவலர் சந்தானம் ஆகிய 5 பேரையும் தென் மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர் தங்கசாமி என்ற மாதவன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் உரிய முறையில் புகாரை பெறாமல் அலட்சியம் காட்டிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்ட காவல் துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்கள் தொடர்பான புகார்களை உடனடியாக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நடைமுறைகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN