காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்ட நிலுவைத் தொகையைச் செலுத்தினால் வட்டி முழு தள்ளுபடி - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி, 22 மே (ஹி.ச) காமராஜர் நூற்றாண்டு கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக அரசிடம் இருந்து நிதி உதவி பெற்ற பயனாளிகளுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முக்கிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் கடனாக நிதி உ
காமராஜர் நூற்றாண்டு வீடு கட்டும் திட்ட நிலுவைத் தொகையைச் செலுத்தினால் வட்டி முழு தள்ளுபடி -  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு


புதுச்சேரி, 22 மே (ஹி.ச)

காமராஜர் நூற்றாண்டு கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக அரசிடம் இருந்து நிதி உதவி பெற்ற பயனாளிகளுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முக்கிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் கடனாக நிதி உதவி பெற்றவர்கள், தங்களது நிலுவையில் உள்ள அசல் தொகையை மட்டும் திரும்பச் செலுத்தினால் போதும், அதற்கான வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக அரசிடம் நிதி உதவி பெற்று, அதனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள அனைத்து பயனாளிகளுக்கும் இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக வட்டி சுமையால் கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் அளிப்பதும், அரசுக்கு சேர வேண்டிய அசல் தொகையை விரைந்து வசூலிப்பதுமே இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கமாகும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கடன் பெற்ற அனைவரும் உடனடியாக தங்களது நிலுவை அசல் தொகையை செலுத்தி, வட்டி தள்ளுபடி சலுகையை பெற்றுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கான வழிமுறைகள் மற்றும் கடைசி தேதி குறித்த விரிவான அறிவிப்பு வீட்டு வசதி வாரியம் மூலம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியில் உள்ள பயனாளிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b