Enter your Email Address to subscribe to our newsletters

பதான்கோட் , 22 மே (ஹி.ச.)
ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரின் நடமாட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து, அந்த தகவல்களை பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பதான்கோட்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுஜன்பூர் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பஞ்சாப் மாநிலம் சக் தரிவால் கிராமத்தை சேர்ந்த பல்ஜித் சிங் (பிட்டு) என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. இவர் பதான்கோட்–ஜம்மு தேசிய நெடுஞ்சாலை-44 பகுதியில் உள்ள பாலம் அருகே உள்ள கடையில் சிசிடிவி கேமரா பொருத்தி, ராணுவ வீரர்களின் நகர்வுகளை பதிவு செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், அந்த காட்சிகள் இணையத்தின் மூலம் பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நபர்களுக்கு அனுப்பப்பட்டதும் போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பல்ஜித் சிங்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் சுஜன்பூர் அருகே உள்ள கடையில் இணைய வசதியுடன் கூடிய சிசிடிவி கேமராவை பொருத்தியதாகவும், துபாயில் இருந்த அடையாளம் தெரியாத நபரிடமிருந்து இதற்கான வழிமுறைகள் பெற்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதற்காக ரூ.40 ஆயிரம் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து சிசிடிவி கேமரா மற்றும் வைஃபை ரூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த உளவு வலையமைப்பின் பின்னணியில் உள்ள பாகிஸ்தான் தொடர்புகள் மற்றும் நிதி ஆதாரங்களை கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA