பக்தர்கள் முழு திருப்தியுடன் இறைதரிசனம் செய்ய தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் - அமைச்சர் ரமேஷ்
சென்னை, 22 மே (ஹி.ச.) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சி.ரமேஷ் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர்
Ram


சென்னை, 22 மே (ஹி.ச.)

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சி.ரமேஷ் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.ரமேஷ், துறையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வது, குடமுழுக்கு நடத்துவது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு பாதுகாப்பது உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், தற்போது நடைபெற்று வரும் திருக்கோயில் திருப்பணிகள், பெருந்திட்ட வரைவு பணிகள், பக்தர்களுக்கான சேவை மேம்பாட்டு நடவடிக்கைகள், துறை அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.ரமேஷ்,

முதலமைச்சர் உறுதியான, நம்பிக்கையான மற்றும் தூய்மையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதனை அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும். உயர் அதிகாரிகள் முதல் திருக்கோயில் பணியாளர்கள் வரை அனைவரும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழர் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில், பக்தர்கள் முழு திருப்தியுடன் இறைதரிசனம் செய்ய தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

திருக்கோயில் நிர்வாகத்தில் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாத வகையில் அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / P YUVARAJ