Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மே (ஹி.ச.)
சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் தலைமை பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம், கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் மே 20, 21 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.
இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் பணியாற்றிய மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தலைமை நிர்வாகக் குழு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்தது.
மேலும், நாகப்பட்டினம் மற்றும் மணப்பாறை தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவளித்த கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் வாக்களித்த மக்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
புதியதாக பொறுப்பேற்றுள்ள திரு. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள நிர்வாகக் குழு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், முந்தைய அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், சிறுபான்மை மக்களின் உரிமைகள் உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோல், இனி வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் மனிதநேய மக்கள் கட்சி சொந்த சின்னத்தில் போட்டியிடும் என முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பி. அப்துல் சமது தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P