காவல்துறை மீது குற்றம்சாட்டி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரகத்தில் புகாரளித்த இளம்பெண்
நெல்லை, 22 மே (ஹி.ச.) திருநெல்வேலி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாருமதி (27). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மருதநாயகம் (27) என்ற நபருடன் காதல் வயப்பட்டு, இருவரும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொ
Nellai


நெல்லை, 22 மே (ஹி.ச.)

திருநெல்வேலி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாருமதி (27). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மருதநாயகம் (27) என்ற நபருடன் காதல் வயப்பட்டு, இருவரும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம் திருமலை குமாரசுவாமி கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மருதநாயகம் வீட்டில் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் நெல்லை அண்ணா நகரில் உள்ள சாருமதி வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.

மருதநாயகம் வெளியூரில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி சாருமதியின் தாயார் உயிரிழந்துள்ளார்.

இருவரும் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட போதும், தாயார் உயிரிழப்பு, சட்டப்பேரவை தேர்தல் என அடுத்தடுத்த நிகழ்வுகளால் இவர்களது திருமணத்தை சட்ட முறைப்படி பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்காக மருதநாயகம் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் அகரம் பகுதிக்கு சென்றுள்ளார்.

வாக்களித்த பிறகு, தனது நண்பர் வீட்டில் இருப்பதாக சாருமதியை தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார்.

மறுநாள், மருதநாயகத்தின் பெற்றோரும், உறவினர்களும் அவரது நண்பர் வீட்டுக்கு சென்று அவரை அடித்து இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து 25 ஆம் தேதி மருதநாயகம் சாருமதியை செல்போனில் தொடர்பு கொண்டு, தனக்கு ஆபத்து உள்ளதாகவும் தனக்கு உதவி செய்யும்படியும் கேட்டுள்ளார். உடனடியாக சாருமதி மாநகர காவல்துறையின் உதவியோடு முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக முறப்பாடு காவல் ஆய்வாளர் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால், மனமுடைந்த சாருமதி, திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மருதநாயகத்தை ஒரு தனியார் பவுண்டேஷன் நிறுவனத்தில் தங்க வைத்திருப்பதாக கூறிய போலீசார், சாருமதியை அழைத்துச் சென்று பார்க்க வைத்துள்ளனர். இருவரும் சிறிது நேரம் உரையாடிய நிலையில், அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இது குறித்து முறப்பநாடு காவல் நிலையத்தில், மருதநாயகம் காணாமல் போனதாக வழக்கும் பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கை நகலை சாருமதியிடம் வழங்கவில்லை. தனது காதல் கணவரை பார்க்க முடியாத விரக்தியில் பாதிக்கப்பட்ட சாருமதி, மீண்டும் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவரிடமும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ளார்.

தவிர, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் புகார் அளித்தும் இதுவரை தனக்கு எவ்விதமான நீதியும் கிடைக்கவில்லை என்று கூறும் சாருமதி, காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது கணவரை மீட்டு தரும்படி புகார் மனுவும் அளித்துள்ளார். மேலும் தனது கணவர் ஆணவ படுகொலை செய்யப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தனது கணவர் மருதநாயகத்தின் உறவினர்கள் தன்னை செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் சாருமதி தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை தன்னிடம் எதுவும் தெரிவிக்காமல் தனது கணவரை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு தந்தையை இழந்த சாருமதி, இந்த ஆண்டு தாயையும் இழந்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவனையும் பிரித்து விட்டதால் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN