Enter your Email Address to subscribe to our newsletters

ஜப்பான், 22 மே (ஹி.ச.)
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய ‘குவாட்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு வரும் மே 26-ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறவுள்ளதாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி, மே 25 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, சுவீடனில் நடைபெறும் நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்தும் நோக்கில் 2007-இல் உருவாக்கப்பட்ட ‘குவாட்’ கூட்டமைப்பு, கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்பம், தடுப்பூசி விநியோகம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது.
இந்த முறை டெல்லியில் நடைபெறும் அமைச்சர்கள் மாநாட்டில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை பராமரித்தல், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் போர், தைவான் நீரிணை பதற்றம் மற்றும் செங்கடல் பாதுகாப்பு நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெறுவது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
நான்கு நாடுகளின் தலைவர்களும் கடந்த ஆண்டு டோக்கியோவில் உச்சி மாநாட்டில் சந்தித்த நிலையில், வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான இந்த கூட்டம், அடுத்தகட்ட செயல்திட்டங்களை வகுக்க உதவும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b