இலங்கை சிறையில் 88 நாட்களாக உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி பாம்பனில் சாலை மறியல்
ராமேஸ்வரம், 22 மே (ஹி.ச.) ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில், இலங்கை சிறையில் 88 நாட்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மீனவர்கள்


ராமேஸ்வரம், 22 மே (ஹி.ச.)

ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில், இலங்கை சிறையில் 88 நாட்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 88 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை கைது செய்தது.

பின்னர் அவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், 88 நாட்கள் கடந்தும் மீனவர்கள் விடுதலை செய்யப்படாமல், இலங்கை நீதிமன்ற உத்தரவின் பேரில் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி பாம்பன் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மதுரை–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் மீனவர்கள் எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P