Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மே (ஹி.ச.)
திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புக்கு மத்தியில், கூட்டணி கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடு குறித்து அவர்கள் தாமே விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விசிக மற்றும் ஐ. யூ. எம். எல். ஆகிய கட்சிகள் இதுவரை “திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்; ஆதரவு அளித்துக்கொண்டிருக்கிறோம்” என்றே கூறி வந்ததாக நினைவூட்டினார்.
ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் அவர்களின் நிலைப்பாடு குறித்து அவர்களே தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
அதேபோல், கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “மகாத்மா காந்தி போல எங்களால் அமைதியாக இருக்க முடியாது.
எதிர்க்கட்சிகள் எப்படி பேசுகிறார்களோ அதேபோல நாங்களும் பதிலளிப்போம். அதிகமாக விமர்சித்தால் அமைதியாக இருக்க மாட்டோம்” என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், ஆ.ராசா குறித்து பேசிய அவர், “ராசா தனது கொள்கையில் உறுதியாக உள்ளார்” என்று கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
திமுக கூட்டணிக்குள் சமீப நாட்களாக கருத்து முரண்பாடுகள், அதிகாரப் பகிர்வு விவாதங்கள் மற்றும் அரசியல் விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam