Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 மே (ஹி.ச.)
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத், இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை குர்பானி கொடுக்கும் வழக்கம் உள்ளது.
அந்த வகையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற வாரச்சந்தை ஆட்டுச் சந்தை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.
வரும் மே 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று அதிகாலை 4 மணி முதலே வியாபாரிகளும், விவசாயிகளும், பொதுமக்களும் சந்தையில் குவிந்தனர்.
மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 15,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், போயர் ரக ஆடுகள் என பல்வேறு ரகங்கள் சந்தையில் இடம்பெற்றிருந்தன.
ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூ.8,000 முதல் அதிகபட்சமாக ரூ.40,000 வரை விற்பனையானது. ஆட்டின் எடை, வயது மற்றும் உடல் தோற்றத்தைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
ஒரே நாளில் மட்டும் ரூ.7 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையானதாக சந்தை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், அடுத்த வாரமும் விற்பனை சூடுபிடிக்கும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b