தவெக வேட்பாளரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு
சென்னை, 22 மே (ஹி.ச) கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, சென்னை மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் அருகே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த
Minister Sekar Babu


Sinora


சென்னை, 22 மே (ஹி.ச)

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, சென்னை மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் அருகே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக வேட்பாளரான சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள், தவெக வேட்பாளர் சினோரா பி.எஸ்.அசோக் மற்றும் விஜயக்குமார் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து, தவெக வேட்பாளர் சினோரா அசோக் தரப்பில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும், தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டதுடன், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி துறைமுகத் தொகுதி சட்டமன்றத் தேர்தல் அலுவலர் முரளிதரன் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் தனியாக புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொலை முயற்சி, சட்டவிரோத கூடுதல், ஆபாசமாக திட்டுதல், காயம் ஏற்படுத்துதல், மிரட்டல் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ