Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மே (ஹி.ச.)
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியப் பகுதியில், அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஐந்து தொடக்கப்பள்ளிகள், ஒரு உயர்நிலைப்பள்ளி, ஒரு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஐடிஐ கல்லூரி என பல அரசு கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள் பொதுத் தேர்வு தேர்ச்சி பட்டியலில், எப்போதும் கடைசி வரிசையில் இடம் பிடித்து வந்தன.
குறிப்பாக அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த சில ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி பட்டியலில், தொடர்ச்சியாக கடைசி இடம் பிடித்து வந்தது.
ஆனால் படிப்படியாக உயர்ந்து, இந்த ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று முதல் வரிசையில் இடம் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
பொதுத் தேர்வு தேர்ச்சி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த அரசு உயர்நிலைப்பள்ளி, இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்து முதலிடத்தை பிடித்ததால் அந்தப் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து, நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவிகள் ’நாங்கள் இந்த பள்ளியை விட்டு செல்ல மாட்டோம், எங்களுக்கு இந்த பள்ளியிலேயே 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பை கொண்டு வாருங்கள்’ என அழுது கொண்டே தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை பார்த்த தலைமை ஆசிரியர் சக்தி சிவம், ’உங்களை விட்டு பிரிய எனக்கும் மனம் இல்லை’ என கூறி அழுத காட்சி அங்கு இருந்த பெற்றோர்கள் என அனைவரையும் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது,
இந்தப் பள்ளி ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதிக்கு நடுவில் உள்ளது.
முதலில் இந்த பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு நாங்கள் தயங்கினோம். ஏனென்றால், இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மேலும் பாதுகாப்பும் சரியாக இல்லாமல் இருந்தது.
இவை அனைத்தும் படிப்படியாக மாறி, பள்ளியை சுற்றி மரங்கள் என பல வசதிகளை கொண்டு வரப்பட்டு, இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் எங்கள் பிள்ளைகளும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
எனவே இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். அதேபோல் இந்த பள்ளியிலேயே 11 மற்றும் 12 ஆம் வகுப்பை கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பெற்றோர்கள், எங்கள் பிள்ளைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறோம்.
அதாவது அரசு உயர்நிலைப் பள்ளியை அரசு மேல்நிலைப் பள்ளியாக மாற்றித் தர வேண்டும் என்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN