Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மே (ஹி.ச.)
நீட் தேர்வில் மீண்டும் பங்கேற்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக குறுகிய கால சிறப்பு பயிற்சி முகாம் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, இந்த நீட் கிராஷ் கோர்ஸ் முகாம் நாளை தொடங்கி ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கடைசி நேர தயாரிப்புக்கு உதவும் வகையில் இந்த துரித பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தனித்தனியாக பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவதால், மாணவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலேயே பயிற்சி பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் பாடவாரியாக நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படும். முக்கிய பாடப்பகுதிகள், தேர்வில் கேள்விகளை அணுகும் முறை, நேர மேலாண்மை மற்றும் கடைசி நேர திருப்புதல் உத்திகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த குறுகிய கால பயிற்சிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நீட் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் அனுபவமிக்க, சிறந்த ஆசிரியர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் நோக்கில் பள்ளிக் கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நீட் மறுதேர்வு எழுதவுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இந்த இலவச பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b