Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 22 மே (ஹி.ச.)
திருப்பதி மலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளதால், அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
கோடை விடுமுறை காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பக்தியாத்திரை மேற்கொள்வோர் அதிகரித்ததே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், இலவச தரிசனத்திற்காக வந்துள்ள பக்தர்கள் சுமார் 3 கிலோமீட்டர் நீள வரிசையில் நின்று 24 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதே வேளை, இலவச தரிசன டோக்கன்களுடன் வந்துள்ள பக்தர்கள் சுமார் 6 மணி நேரமும், ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் சுமார் 3 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி,
தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தொடர் முயற்சியால் நேற்று ஒரே நாளில் 79 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ததாக தெரிவித்தார்.
மேலும், சாதாரண பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இன்று அதிகாலை ஏழுமலையானுக்கு நடைபெற்ற அபிஷேகத்தின் போது 5,000-க்கும் மேற்பட்ட சாதாரண பக்தர்கள் முன் எப்போதும் இல்லாத அளவில் தரிசனம் செய்ததாகவும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P