Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மே (ஹி.ச)
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள ராம் நகர், 4 ஆவது தெருவில் வசித்து வந்தவர் அஜய்
(வயது 23).
இவர் கடந்த 17 ஆம் தேதி இரவு மெரினா கடற்கரை பகுதியில் படுத்து தூங்கி உள்ளார். அப்போது அவரது செல்போன் காணாமல் போயுள்ளது.
ஆகையால், அங்கு அருகில் இருந்த, ஏற்கனவே அறிமுகமான தனுஷ் குமார் என்பவரிடம், எனது செல்போனைக் காணவில்லை. அதை நீ பார்த்தாயா? என கேட்டு உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தனுஷ், நீ உன் செல்போனை எங்கேயோ தொலைத்து விட்டு, என்னை வந்து கேட்கிறாயா? என கூறி தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள், இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த 19 ஆம் தேதி அஜய், அவரது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த தனுஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர், அஜய்யை இடைமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கத்தியாலும் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதில், அஜய்-க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை வழங்கப்பட்டது.
மேலும், சம்பவம் குறித்து, சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய போலீஸார், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதன் அடிப்படையில், சம்பவத்தில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த தனுஷ்குமார் (வயது 20), ராஜ்குமார் (வயது 23), காமேஸ்வரன் (வயது 28), காந்தி என்கிற நரேஷ் குமார் (வயது 19), முகேஷ் குமார் (வயது 19) ஆகிய ஐவரை கடந்த 19 ஆம் தேதி இரவே கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு பட்டாகத்திகள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பிறகு ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஜய், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கும் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து மருத்துவமனையில் உரிய விசாரணை மேற்கொண்ட ஐஸ் ஹவுஸ் போலீஸார், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்கமாக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்தி குத்தால் இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இளைஞர் திடீரென உயிரிழந்திருப்பதால் ஐஸ் பகுதியில் சோகமும், பரபரப்பும் கலவையாக ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN