Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 22 மே (ஹி.ச.)
விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் மூலம் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், விழுப்புரம் நேரு வீதியில் இயங்கி வந்த நகராட்சி தாய்-சேய் நல பிரசவ விடுதி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த கட்டடத்திற்கான அடிக்கல் 03.06.1946-ல் நாட்டப்பட்டது. அப்போதைய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ருக்மணி லட்சுமிபதி அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பணிகள் முடிக்கப்பட்டு 07.05.1947 அன்று பிரசவ விடுதியை சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.குட்டிமாலு அம்மாள் திறந்து வைத்தார்.
இந்த கட்டடத்திற்கு நாடு சுதந்திரம் அடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு திறப்பு விழா நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்பணிகள் நடப்பதற்கு அன்றைய விழுப்புரம் நகர்மன்றத் தலைவரும் திராவிட இயக்க முன்னோடியுமான கோவிந்தராஜுலு நாயுடு உள்ளிட்டவர்கள் முக்கிய பங்காற்றி இருக்கின்றனர்.
மேலும், பிரசவ விடுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அன்றைய விழுப்புரம் பகுதியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் தானமாக வழங்கி இருக்கின்றனர்.
இதற்கான அடிக்கற்கள் இங்குப் பதிக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்தக் கட்டடத்தை இடிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதில், இங்குப் பதிக்கப்பட்டுள்ள அடிக்கற்களும் சேதமடைந்து வருகின்றன. மே 21 காலை நான் இங்கு சென்று பார்த்த போது 1947ஆம் ஆண்டு திறப்பு விழா நடந்ததற்கான அடிக்கல் பாதியாக உடைக்கப்பட்டிருந்தது.
அதனை பாரர்த்த போது, அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
விழுப்புரம் நகராட்சி பிரசவ விடுதி கட்டடம் 79 ஆண்டுகால பழமையும், பெருமையும் வாய்ந்தது. ஆங்கிலேயர் கலை பாணியில் கலை நேர்த்தியுடன் மிகவும் அழகாகக் கட்டப்பட்ட இக்கட்டடம் புராதான சின்னமாக பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்.
என்ன காரணத்தினாலோ இடித்து அப்புறப்படுத்தப்படுகிறது. கட்டடம் மறைந்தாலும் இதன் வரலாற்றைச் சொல்லும் எஞ்சி நிற்கும் அடிக்கற்களையாவது பாதுகாக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் விரைந்து எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN