Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 22 மே (ஹி.ச.)
தூத்துக்குடி பூபாலராயபுரம் 9-ஆவது தெருவைச் சேர்ந்த பால கண்ணன் மனைவி ஜெயலட்சுமி (30) தம்பதிகளுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.
ஜெயலட்சுமி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன், பூபாலராயபுரத்தில் உள்ள தனது தாய் சியாமளாவின் வீட்டில் ஒரே குடும்பமாக வசித்து வந்தார்.
இன்று காலை, ஜெயலட்சுமி வீட்டில் துணிகளைத் துவைத்துவிட்டு, அவற்றை உலர்த்துவதற்காக வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார்.
அங்கு துணி காய வைக்கும் கம்பிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த தென்னை மரத்தின் ஓலை ஒன்று தடையாக இருந்துள்ளது. இதனால் ஜெயலட்சுமி அந்தத் தென்னை மர ஓலையைத் தனது கையால் தள்ளிவிட்டுள்ளார்.
அப்போது, அந்த ஓலையின் மீது அருகில் சென்ற பிரதான மின்சாரக் கம்பி உரசிக் கொண்டிருந்ததால், எதிர்பாராத விதமாக ஓலையின் வழியாக ஜெயலட்சுமியின் உடலில் மின்சாரம் பாய்ந்தது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர், மாடியிலேயே மயங்கி விழுந்துள்ளார். நீண்ட நேரமாகியும் மாடிக்குச் சென்ற மகளைக் காணவில்லை என்பதால், அதிர்ச்சியடைந்த தாய் சியாமளா மாடிக்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது மகள் ஜெயலட்சுமி அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு அலறியுள்ளார்.
அவரது சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், ஜெயலட்சுமியை மீட்டுதூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு ஜெயலட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b