Enter your Email Address to subscribe to our newsletters

சாங்ஜி, 23 மே (ஹி.ச.)
வடக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் நேற்று இரவு 7 மணி அளவில் நேர்ந்த கோர விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 38 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர்.
சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்டுள்ள தகவலின்படி,
விபத்து நடந்தபோது, சுமார் 247 சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்திற்கு அடியில் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
சாங்ஜி நகரில் அமைந்துள்ள லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் கார்பன் மோனாக்சைடு வாயுவின் அளவு அபாயகரமான அளவைத் தாண்டியதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வெளியே கொண்டுவரப்பட்டுள்ளனர்.
சீனா உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தியாளராக இருந்தாலும், அங்கு சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதது மற்றும் பழைய உபகரணங்கள் பயன்பாடு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
சம்பவம் குறித்து உள்ளூர் அவசரநிலை மேலாண்மைத் துறையினர் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சிக்கியுள்ள 38 பேரையும் உயிருடன் மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர், மருத்துவக் குழுவினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணைக்குப் பிறகே முழுமையாகத் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b