கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை - வனத்துறை அறிவிப்பு
தேனி, 23 மே (ஹி.ச.) தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த 30 நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வெள்ளகெவி,
கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல  தடை - வனத்துறை அறிவிப்பு


தேனி, 23 மே (ஹி.ச.)

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

கடந்த 30 நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வெள்ளகெவி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது.

நீரின்றி அருவிப் பகுதி வறண்டு காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பது சாத்தியமற்றதாக மாறியது.

மேலும், தேங்கி நிற்கும் குறைந்த அளவிலான நீரில் குளிப்பது சுகாதாரச் சீர்கேடுகளை உண்டாக்கும் என்பதாலும், வன விலங்குகள் நீர் தேவைக்காக அருவிப் பகுதிக்கு வர வாய்ப்புள்ளதாலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனத்துறையினர் தெரிவித்தனர்.

தடையை அமல்படுத்தும் வகையில் அருவியின் நுழைவாயில் பகுதி பூட்டப்பட்டு, வனத்துறை பணியாளர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீர்வரத்து சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என தேனி வனச்சரக அலுவலகம் அறிவித்துள்ளது.

தென் மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகை தரும் நிலையில், திடீர் தடையால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b