“மக்கள் அலுவலகமா? குடும்ப விழாவா?” – செங்கல்பட்டு தவெக எம்.எல்.ஏ தியாகராஜன் மீது சர்ச்சை
செங்கல்பட்டு, 23 மே (ஹி.ச.) 2026 சட்டமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ தியாகராஜன், பதவியேற்ற சில நாட்களிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளார். மக்கள் நலம், புதிய அரசியல்
தியாகராஜன்


செங்கல்பட்டு, 23 மே (ஹி.ச.)

2026 சட்டமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏ தியாகராஜன், பதவியேற்ற சில நாட்களிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மக்கள் நலம், புதிய அரசியல் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தலை சந்தித்த தியாகராஜன், தற்போது தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா காரணமாக விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

செங்கல்பட்டு புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. பொதுவாக மக்கள் பிரதிநிதிகளின் அலுவலக திறப்பு நிகழ்வுகளில் தொகுதி மக்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலைப்படுத்தப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் தியாகராஜன் தொகுதி மக்களை புறக்கணித்து தனது குடும்பத்தினரையே முன்னிலைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அலுவலகத்தின் உள்ளே அவரது பெற்றோர் மற்றும் மனைவி மட்டுமே அமர வைக்கப்பட்டு, பிரம்மாண்ட பூஜை மற்றும் புனஸ்காரங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த சிலர், “மக்கள் குறைகளை கேட்க வேண்டிய அரசு அலுவலகத்தை, சொந்த வீட்டு கிரகப்பிரவேச விழாவைப் போல நடத்தினர்” என விமர்சனம் தெரிவித்துள்ளனர். பின்னரே அலுவலகம் முறைப்படி திறந்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு நிதி மற்றும் மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பொதுமக்கள் அலுவலகத்தை குடும்ப நிகழ்ச்சி போல நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“புதிய அரசியல்” என கூறி வந்த தமிழக வெற்றிக்கழகத்தின் புதிய எம்.எல்.ஏ-வின் இந்த நடவடிக்கை, செங்கல்பட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam