பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் கால்நடைச் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தூத்துக்குடி, 23 மே (ஹி.ச.) பக்ரீத் பண்டிகை வரும் மே 28 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வாங்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் இன்று அதிகாலை முதலே தூத்துக்குடி மாவ
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் கால்நடைச் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை


தூத்துக்குடி, 23 மே (ஹி.ச.)

பக்ரீத் பண்டிகை வரும் மே 28 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வாங்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் இன்று அதிகாலை முதலே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் சந்தையில் குவிந்தனர்.

தென் தமிழகத்தின் மிகப்பெரிய கால்நடைச் சந்தைகளில் ஒன்றான எட்டயபுரத்திற்கு ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 15,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

சந்தையில் சாதாரண ஆடுகள் ரூ.8,000 முதல் ரூ.12,000 வரையிலும், செம்மறி ஆட்டுக் கிடாக்கள் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரையிலும் விற்பனையாயின. தரமான, அதிக எடை கொண்ட ஆடுகள் ரூ.30,000 வரை கைமாறின.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடு ஒன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை விலை அதிகரித்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை நடைபெறும் விற்பனை, இன்று இருமடங்காக உயர்ந்து ரூ.4 கோடியைத் தொட்டுள்ளதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பண்டிகை நெருங்க நெருங்க வரும் வாரங்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b