முன்னாள் பஞ்சாயத்து தலைவியின் கணவர் மீது கொலைவெறி தாக்குதல் - 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
சிவகங்கை, 23 மே (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு இதே கிராமத்தில் இறந்தவரின் உடலை ஏற்றிச் சென்ற அமரர் ஊர்திக்கு வழிவிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப
Husband of Former Panchayat President Subjected to Brutal Assault


சிவகங்கை, 23 மே (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு இதே கிராமத்தில் இறந்தவரின் உடலை ஏற்றிச் சென்ற அமரர் ஊர்திக்கு வழிவிடுவதில் இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, அமரர் ஊர்திக்கு வழிவிட மறுத்து தகராறில் ஈடுபட்ட நபர்களை பச்சேரி கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவியின் கணவரான மெய்ஞ்ஞானமூர்த்தி கண்டித்து தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அந்த சம்பவம் முன்விரோதமாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பச்சேரி பகுதியில் நின்று கொண்டிருந்த மெய்ஞ்ஞானமூர்த்தியை, 5 பேர் கொண்ட கும்பல் திடீரென சுற்றி வளைத்தது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலில், கும்பல் கையில் வைத்திருந்த அரிவாளால் மெய்ஞ்ஞானமூர்த்தியை சரமாரியாக வெட்டியது.

இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொடூர சம்பவம் குறித்து தகவலறிந்த திருப்பாச்சேத்தி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மெய்ஞ்ஞானமூர்த்தியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள 5 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர வலைவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

அமரர் ஊர்திக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட சிறு தகராறு, கொலைவெறி தாக்குதலாக மாறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b