Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 23 மே (ஹி.ச.)
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களுக்கு
தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளப்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிறுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய திமுக ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. திமுக ஆட்சியின் ஐந்தாண்டுகளில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 27 ஆயிரம் போக்சோ சட்டப்படியான குற்றங்கள் உள்பட மொத்தம் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்தன. அதே போன்ற நிலை இனியும் தொடராமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிங்கப் பெண் சிறப்புப் படை உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கோவை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தூக்கு தண்டனை வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam