Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 23 மே (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட செல்லக்குட்டப்பட்டி பகுதியில், அதிகாரப்பூர்வமாக மூடப்பட்ட அரசு கிரானைட் குவாரியில் மர்ம கும்பல் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி கடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
செல்லக்குட்டப்பட்டி வருவாய் கிராம சர்வே எண் 197-ல் சுமார் 5 ஏக்கர் 11 சென்ட் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு தரிசு நிலத்தில், சாம்பல் நிற கிரானைட் பாறைகளை வெட்டி எடுக்க கடந்த 1993-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த “சக்தி எண்டர்பிரைசஸ்” நிறுவனத்திற்கு 10 ஆண்டுகள் காலத்திற்கு அரசு குத்தகை வழங்கியிருந்தது. இந்த குத்தகை காலம் 2003-ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிலையில், குவாரி அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது, மூடப்பட்ட அந்த அரசு குவாரியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, டிராக்டர்கள் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கட்டுமானப் பணிகளுக்கான உளிக்கற்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படும் வேலிக்கற்கள் அதிக அளவில் வெட்டி எடுத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், நள்ளிரவு நேரங்களில் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுவதால், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் கடும் அதிர்வு மற்றும் வெடிச்சத்தம் ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வெடி விபத்தின்போது சிதறும் பாறைத் துகள்கள் வீடுகளின் மீது விழுவதால், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
“இரவு முழுவதும் வெடிச்சத்தம் கேட்டு தூங்க முடியாத நிலை உள்ளது. வீடுகள் மீது கற்கள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எப்போது பெரிய விபத்து நேருமோ என்ற பயத்தில் இருக்கிறோம்” என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
அரசுக்குச் சொந்தமான மூடிய குவாரியில் எவ்வித அச்சமுமின்றி சட்டவிரோதமாக வெடி வைத்து கற்கள் வெட்டி கடத்தப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக தலையிட்டு தீவிர விசாரணை நடத்தி, அரசு சொத்துகளை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam