நீட் மறு தேர்வு 100% தவறின்றி நடைபெறும் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் உறுதி
புதுடெல்லி , 23 மே (ஹி.ச.) நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், மறுதேர்வு 100 சதவீதம் தவறின்றி நடைபெறும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உறுதியளித்து
N


புதுடெல்லி , 23 மே (ஹி.ச.)

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், மறுதேர்வு 100 சதவீதம் தவறின்றி நடைபெறும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார்.

கடந்த மே 3-ந்தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக (சி.பி.ஐ.) விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், ரத்து செய்யப்பட்ட தேர்வுக்குப் பதிலாக அடுத்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி மறுதேர்வு நடைபெறும் என்று நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி அறிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதாவது:–

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மனவேதனையில் உள்ளனர். அந்த நிலையை புரிந்துகொண்டு அரசு பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது.

சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. தேர்வில் சில மதிப்பீடுகளில் சமரசம் செய்யப்பட்டிருந்ததால் அதை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கல்வி முறையில் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மற்றும் தேர்வு மாபியாவின் செயலால், ஒரு மாணவருக்குக் கூட தகுதியான இடம் இழக்கப்படக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.

எனவே, மறுதேர்வு முழுமையாக பாதுகாப்புடன், 100 சதவீதம் தவறின்றி நடைபெறும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA