சென்னையில் பலத்த சூறாவளி காற்று - மெரினாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்
சென்னை, 23 மே (ஹி.ச.) சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வீசிய பலத்த சூறாவளி காற்று காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிக
சென்னையில் பலத்த சூறாவளி காற்று - மெரினாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம்


சென்னை, 23 மே (ஹி.ச.)

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வீசிய பலத்த சூறாவளி காற்று காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால், சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

பல இடங்களில் பேனர்கள், தகர கூரைகள் பறந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய காட்சிகள் காணப்பட்டன.

உலகப் புகழ்பெற்ற மெரினா கடற்கரையில் இந்து காலை 8 மணி முதல் பலத்த புழுதி காற்று வீசியது. மணல் சூறாவளி போல் எழுந்த புழுதியால் பார்வைத்திறன் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக களமிறங்கி, மெரினா கடற்கரையில் இருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரைக்கு செல்லும் வழிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 6 மணி நேரத்திற்கு காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும். மரங்கள், மின்கம்பங்கள் அருகே நிற்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Hindusthan Samachar / vidya.b