Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மே (ஹி.ச.)
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூக்கடைப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் மாணவி, தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி அவரது சக மாணவிகள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் பாரதி மோகன், மயக்கவியல் நிபுணர் டாக்டர் சண்முகசுந்தரம் மற்றும் டாக்டர் ஜெயபிரகாஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு உடனடியாக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் செவிலியர் மாணவிக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள், மருத்துவ நடைமுறைகள் மற்றும் உயிரிழப்பிற்கான காரணங்கள் குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கூடுதல் செயலாளர் பிறப்பித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ