Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 23 மே (ஹி.ச.)
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தவறான சிகிச்சை மற்றும் அலட்சியமே மரணத்திற்குக் காரணம் என குற்றம்சாட்டிய சக மாணவிகள் மருத்துவமனை வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளியின் நிலையை சரியாக கவனிக்கவில்லை என்றும், உடல்நிலை மோசமான நிலையில் இருந்தபோதும் தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மாணவிகள் குற்றம்சாட்டினர்.
சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி பொறுப்புக்கூறுவோருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் அங்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களுக்கு விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.
அதில்,
சென்னையில் இருந்து உயர்மட்ட மருத்துவக் குழு திருச்சிக்கு சென்று முழுமையான விசாரணை நடத்தும். விசாரணையில் தவறு உறுதி செய்யப்பட்டால், பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் புகார்கள் எழுத்து மூலம் பெறப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக சம்பந்தப்பட்டோருக்கு எதிராக தற்காலிக நிர்வாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
சம்பவத்தையடுத்து மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டும் என பல்வேறு மாணவர் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam