கடந்த 3 நாட்களில் 3,246 ரவுடிகள் கைது - தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை
சென்னை, 24 மே (ஹி.ச.) தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மேற்கொண்ட தீவிர சோதனை நடவடிக்கையில், 3,246 ரவுடிகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
கடந்த 3 நாட்களில்  3,246 ரவுடிகள் கைது - தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை


சென்னை, 24 மே (ஹி.ச.)

தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக காவல்துறை மேற்கொண்ட தீவிர சோதனை நடவடிக்கையில், 3,246 ரவுடிகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதலமைச்சரின் உத்தரவின்பேரில், அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் ரவுடிசம், போதைப்பொருள் விற்பனை மற்றும் குற்றக் கும்பல்களை ஒடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாநில மக்களிடையே அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது தொடர்பான மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, ரவுடிசம், போதைப்பொருள் மற்றும் பிற மனோவியல் பொருட்களின் தீய விளைவுகளிலிருந்து சமூகத்தை விடுவிப்பதே காவல்துறையின் உறுதிமொழியாகும்.

இந்த நடவடிக்கையின்போது, மொத்தம் 15,349 ரவுடிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், 12,650 பேர் முந்தைய குற்ற வழக்குகள் உள்ளவர்கள், 2,699 பேர் குற்ற வழக்குகள் இல்லாதவர்கள், விசாரணை மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகு, 3,246 நபர்கள் மேல் விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

இவர்களில் 2,468 பேர் முந்தைய குற்ற வழக்குகள் உள்ளவர்கள், 778 பேர் குற்ற வழக்குகள் இல்லாதவர்கள். மேலும், 844 பேர் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 488 பேர் முந்தைய வழக்குகள் உள்ளவர்கள், 356 பேர் வழக்குகள் இல்லாதவர்கள்.

இதே காலகட்டத்தில், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act) கீழ் தமிழகம் முழுவதும் 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடவடிக்கையின்போது, 267.756 கிலோ கஞ்சா மற்றும் 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சந்தை மதிப்பு ரூ.1,43,78,200 என மதிப்பிடப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களை தீர்க்கமாக கட்டுப்படுத்துதல், ஒருங்கிணைந்த குற்றக் கும்பல்களை முறியடித்தல், அதன் மூலம் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலையை வலுப்படுத்துவதே இதன் நோக்கம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களை கண்காணித்து கட்டுப்படுத்தி, மாநிலம் முழுவதும் பொது அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும் வகையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b