Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 24 மே (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 20-ஆம் தேதி முதல் 108 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது.
இதன் தாக்கமாக, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் 18 லட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக வெப்பநிலை மற்றும் வெப்பத்தாக்கம் காரணமாக கோழிகள் பெருமளவில் இறப்பதாகவும், கோடைக்கால வெப்பம் கோழி வளர்ப்புத் தொழிலை கடுமையாக பாதித்துள்ளதாகவும் பண்ணையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், காற்றோட்டமின்மை, குடிநீர் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு போன்ற காரணிகளும் கோழிகள் உயிரிழப்பிற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
கோடைக்கால வெப்பத்தால் கோழிகள் தீவனம் உண்ணாமல் இருப்பது, எடை குறைதல் மற்றும் முட்டை உற்பத்தி சரிவு போன்ற பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
வெப்பத்தை குறைக்கும் முயற்சியாக பண்ணைகளைச் சுற்றி சாக்குப்பைகள், துணிகளை நனைத்துக் கட்டுதல், சொட்டு சொட்டாக நீர் விடுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வெப்ப அலையின் தாக்கம் குறையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கோழிகள் பெருமளவில் இறந்ததால் தங்களுக்கு சுமார் ரூ.54 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P