Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மே (ஹி.ச.)
சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எளிய மக்களிடம் ஊடகத்தின் மூலம் அரசியல் விழிப்புணர்வை கொண்டு சென்றதில் ஆதித்தனாருக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாக தெரிவித்தார்.
அவருக்கு மரியாதை செலுத்துவது தமிழுக்கும், உழைப்புக்கும், சாதாரண மக்களின் விழிப்புணர்வுக்கும் மரியாதை செலுத்துவது போன்றது என்றும் கூறினார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஐந்து நாடுகளுக்கு மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் குறித்து பேசிய அவர்,
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்வது அரசியல் விளையாட்டாக உள்ளதாக குறிப்பிட்டார்.
அந்த பயணங்கள் மூலம் இந்தியாவின் எதிர்கால தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக AI, செமிகண்டக்டர், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் கடல்சார் தொழில்நுட்ப துறைகளில் இந்தியாவுக்கு பலன்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற செவிலியர் மாணவி உயிரிழப்பு மற்றும் 10 வயது குழந்தை மரணம் தொடர்பாக கவலை தெரிவித்த அவர், அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மின்வெட்டு பிரச்சனை குறித்து பேசிய அவர், மக்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆரோக்கியமான விவாதம் நடத்த வேண்டும் என்பது தனது கருத்து என்றும் தெரிவித்தார்.
அதேபோல், காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான அரசியல் உறவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், கூட்டணிக்குள் நிச்சயமற்ற தன்மை இருப்பதாக கூறினார்.
திருமாவளவன் தெரிவித்த கருத்துகளையும் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம் மக்களுக்கு தெளிவான நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றார்.
திமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க விரும்பவில்லை என்றும், தற்போதைய ஆட்சிக்கு செயல்படும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ