Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு , 24 மே (ஹி.ச.)
பெங்களூரு அருகே 100 ஏக்கர் பரப்பளவில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் கர்நாடக முதலமைச்சர் சித்து ராமையா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம் மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, விரிவான மற்றும் பாதுகாப்பான வசதிகளுடன் புதிய ஸ்டேடியம் அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்தது.
இதன்படி, ஆனேக்கல் தாலுகா சூர்யாநகர் 4-வது ஸ்டேஜில் 100 ஏக்கர் பரப்பளவில் 80 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் புதிய ஸ்டேடியம் கட்டப்படுகிறது. ரூ.943 கோடியே 46 லட்சம் மதிப்பில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
3 ஆண்டுகளில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், வீட்டுவசதித்துறை சார்பில் பொதுமக்களுக்கு வீட்டுமனைகள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
புதிய ஸ்டேடியத்தில் உள் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட நவீன வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
சர்வதேச தரத்திலான தொழில்நுட்ப வசதிகளுடன் இது உருவாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூர்யாநகரில் அமைக்கப்படும் இந்த ஸ்டேடியம் நாட்டிலேயே 2-வது பெரியதாக இருக்கும்.
தற்போது குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் 1 லட்சம் இருக்கைகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA