Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மே (ஹி.ச.)
தொழில்துறை தொடர்பான அறிமுகக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது ஏற்பட்ட தனது சிரிப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில்,
கேள்வி – பதில் அமர்வு முடிந்த தருணத்தில் இயல்பாக சிரித்ததாகவும், அது எந்தக் கேள்விக்கும் அல்லது சம்பவத்திற்கும் எதிரான பிரதிபலிப்பு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தனது உடல் மொழி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அரசியல் நோக்கில் திரித்து பரப்பப்படுவது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரச் சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் கீர்த்தனா, சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளதாக தெரிவித்த அவர், குழந்தைகளுக்கான நீதியும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் அரசின் முதல் முன்னுரிமை என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இத்தகைய உணர்வுப்பூர்வமான சூழ்நிலையிலும் அடிப்படையற்ற விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தேவையற்ற ட்ரோலிங் நடைபெறுவது கவலைக்குரியது என்றும், உண்மைகளை திரித்து ஒருவரின் தனிப்பட்ட தருணங்களை அரசியல் ஆயுதமாக மாற்றுவது சமூகத்திற்கு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல என்றும் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
மக்கள் பாதுகாப்பிலும், நீதியை நிலைநாட்டுவதிலும் தமிழ்நாடு அரசு எந்தவித சமரசமும் செய்யாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P