மாற்று இடமின்றி கடைகள் காலி செய்ய நோட்டீஸ் - குன்னூரில் 24 மணி நேர கடையடைப்பு போராட்டம்
நீலகிரி, 24 மே (ஹி.ச.) குன்னூர் மார்க்கெட் கடைகளை இடித்து புதிய கட்டடங்கள் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் இன்று 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சிக்கு சொந்தமான சுமார் 800 கடைகளை ரூ.42 கோடி மதிப்பீட
காரைக்காலில் இன்று கடையடைப்பு போராட்டம்


நீலகிரி, 24 மே (ஹி.ச.)

குன்னூர் மார்க்கெட் கடைகளை இடித்து புதிய கட்டடங்கள் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் இன்று 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சிக்கு சொந்தமான சுமார் 800 கடைகளை ரூ.42 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மாற்று இட வசதி வழங்காமல் 7 நாட்களில் கடைகளை காலி செய்ய இறுதிக்கட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குன்னூர் மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டதுடன், வியாபாரிகளுக்கு ஆதரவாக நகரம் முழுவதும் பல கடைகள் அடைக்கப்பட்டதால் குன்னூர் நகரப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

முன்னறிவிப்பின்றி நடைபெற்ற இந்த கடையடைப்பால், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே மார்க்கெட்டிற்கு வரும் கிராமப்புற தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam