Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மே (ஹி.ச.)
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்ததாகக் கூறி, அவரது பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டி.கே.சிவக்குமாரின் கருத்து “அடாவடித்தனத்தின் உச்சம்” என்றும், காவிரி நதிநீர் உரிமையை முழுமையாக கர்நாடகத்துக்கே சொந்தமாக்க முயலும் மனப்போக்கின் வெளிப்பாடு என்றும் விமர்சித்துள்ளார். கன்னட மொழியும், கர்நாடக மாநிலமும் உருவாகும் முன்பே காவிரி மற்றும் தமிழ்நாட்டுக்கு வரலாற்று தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், காவிரி நீரின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை மறுக்கும் எந்த முயற்சியும் ஏற்க முடியாதது என தெரிவித்துள்ளார்.
மேலும், உலகளாவிய நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, ஆற்றின் கடைமடைப் பகுதியில் வாழும் மக்களுக்கும் உரிமை உண்டு என்றும், அந்த அடிப்படையில் காவிரியின் மீது தமிழ்நாட்டுக்கும் உரிமை இருப்பதாக சீமான் வலியுறுத்தியுள்ளார். கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் தமிழர்களின் நதிநீர் உரிமையை பாதிக்கும் நடவடிக்கை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடக துணை முதல்வரின் பேச்சை தமிழக அரசு கண்டிக்க வேண்டும் என்றும், மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam