Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 24 மே (ஹி.ச.)
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் புதிய விரிவான திட்டத்தை ஒன்றிய அரசிடம் வழங்க உள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது அவரது ஆணவப் போக்கை காட்டுகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், பலவீனமான கூட்டணி அரசு அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் அவர் இவ்வாறு பேசியிருப்பது போல தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக கூறப்படுவது, தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளுக்கு எதிரான செயல். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட எங்கள் கழகத் தலைவர் எந்தவிதத் தியாகமும் செய்யத் தயங்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், அதனை மீறி கர்நாடக அரசு திட்டத்தை முன்னெடுத்து வருவது டெல்டா விவசாயிகள் மத்தியில் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், கர்நாடக துணை முதலமைச்சரின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக பதிலளித்து கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை உறுதியாக நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கே.என்.நேரு வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam