Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 24 மே (ஹி.ச.)
ஈரோட்டில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்ந்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட அமைச்சர் விஜய் பாலாஜி, கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் நடைபெற்று வரும் உற்பத்தி மற்றும் விநியோக பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசின் இலவச வேட்டி-சேலை மற்றும் பள்ளி சீருடை உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர்,
அரசின் இலவச வேட்டி-சேலை திட்டம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சீருடை தயாரிப்பு பணிகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக விசைத்தறி தொழிலாளர்களுக்கு தற்போது 3 மாதங்கள் மட்டுமே கிடைக்கும் வேலைவாய்ப்பை 9 மாதங்களாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை அரசு மனிதநேய அடிப்படையில் பரிசீலித்து, முடிந்தளவு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யும்” என்றார்.
மேலும், பள்ளி சீருடை உற்பத்தி நிலவரம் குறித்து விளக்கமளித்த அமைச்சர்,
மொத்தமாக 139 லட்சம் மீட்டர் துணி தேவைப்படுகின்ற நிலையில், அதில் 130 லட்சம் மீட்டர் துணி ஏற்கனவே துணிநூல் பதனிடும் ஆலைக்கு வந்துள்ளது.
மீதமுள்ள 9 லட்சம் மீட்டர் துணி வர வேண்டியுள்ளது. தற்போது வரை 110 லட்சம் மீட்டர் துணி தயாரிக்கப்பட்டு, மூன்று கட்டங்களாக பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 17.50 லட்சம் மீட்டர் துணி தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த மாத இறுதிக்குள் அவையும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல் கூடுதலாக 5.50 லட்சம் மீட்டர் துணி தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.
இலவச வேட்டி-சேலை திட்டத்திற்கான அரசாணை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடுவது தொடர்பான விவரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும்.
இந்த ஆண்டு தரமான முறையில் இலவச வேட்டி-சேலை உற்பத்தி செய்யப்படும். கடந்த ஆண்டு ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் சர்ச்சைகள் இந்த முறை ஏற்படாத வகையில் அரசு சிறப்பு கவனம் செலுத்தும் என்றார்.
மேலும், வேட்டி-சேலை வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு,
டிசைன் மாற்றம் தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு இலவச மின்சார யூனிட் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்தார்.
இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும். அதன்பிறகு உரிய அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN