திருக்கோயில் பிரசாத கடைகளில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்ய அமைச்சர் ரமேஷ் உத்தரவு
சென்னை, 24 மே (ஹி.ச.) தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களில் செயல்படும் பிரசாத விற்பனை நிலையங்கள், அன்னதான சமையலறைகள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு வசதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், உணவுப் பாதுகாப்பு
Minister Ramesh


Hh


சென்னை, 24 மே (ஹி.ச.)

தமிழ்நாடு முழுவதும் உள்ள திருக்கோயில்களில் செயல்படும் பிரசாத விற்பனை நிலையங்கள், அன்னதான சமையலறைகள், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு வசதிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சி.ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் மற்றும் திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் ரூ.57.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய அம்பாள் மரத்தேர் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட அமைச்சர், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற ஆய்வின்போது,

பிரசாத விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பிரசாதங்கள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) விதிமுறைகளின்படி உள்ளனவா என ஆய்வு செய்தார்.

தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத உணவுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதால், அவற்றை விற்பனை செய்யக் கூடாது என்றும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடமிருந்து விளக்கம் பெற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள RO குடிநீர் தொட்டியின் TDS அளவு குறைவாக இருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், குடிநீர் பராமரிப்பை காலந்தோறும் மேற்கொண்டு தனிப்பட்ட பதிவேடு பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

கழிப்பறைகள் தினமும் குறைந்தது ஐந்து முறை சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், சுத்தம் செய்யப்பட்ட நேரம் மற்றும் பணியாளர் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

திருக்கோயில்களில் இலவச காலணி பாதுகாப்பு மையங்களை சிறப்பாக பராமரிக்கவும் அறிவுரை வழங்கிய அமைச்சர், ரூ.5.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புப் பணிகளையும் ஆய்வு செய்து, அவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சீ.ரமேஷ்,

உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவது அல்லது காலாவதி தேதி குறிப்பிடப்படாத பொருட்களை விற்பனை செய்வது போன்ற குற்றச்செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பிரசாத கடைகளின் விற்பனை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், அனைத்து திருக்கோயில்களிலும் FSSAI வழிகாட்டுதல்கள், சுகாதார நடைமுறைகள், குடிநீர் தரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தூய்மை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர், திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ராஜகோபுர கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

அதேபோல், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில் யானை “அகிலா”வின் 24-வது பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் இனிப்புகள் மற்றும் பழங்கள் வழங்கி யானையிடம் ஆசி பெற்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ