என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தரக்கூடாது – வேல்முருகன்
சென்னை, 24 மே (ஹி.ச.) என்.எல்.சி நிர்வாகம் புதிய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், அதற்கு தமிழ்நாடு அரசு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளா
J


சென்னை, 24 மே (ஹி.ச.)

என்.எல்.சி நிர்வாகம் புதிய நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், அதற்கு தமிழ்நாடு அரசு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நெய்வேலி, விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுரங்க விரிவாக்கத்திற்காக வீடுகள் மற்றும் விளைநிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி. நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு நிரந்தர வேலை, குடியிருப்பதற்கான மாற்று இடம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்குத்து கிராமத்தில் காவல்துறை பாதுகாப்புடன் என்.எல்.சி. அதிகாரிகள் கனரக இயந்திரங்கள் மூலம் பள்ளம் வெட்டும் பணியை தொடங்கியதை எதிர்த்து, கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விடுவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட 15 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படாமல் உள்ள நிலையில், புதிய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், என்.எல்.சி. நிறுவனத்தில் உள்ளூர் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் வடமாநிலத்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

நெய்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் என்.எல்.சி. செயல்பாடுகளால் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக குடிநீரில் பாதரச மாசு அதிகரித்திருப்பதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பாதிப்பு இருப்பதை அரசு அமைப்புகளே ஒப்புக்கொள்ளும் நிலையில், மீண்டும் நிலங்களை கையகப்படுத்துவது மக்களுக்கு எதிரான செயல் என்றும், எத்தனை கோடி ரூபாய் வழங்கினாலும் பூர்வீக நிலங்களை ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய், பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் வழங்கிய உறுதியைப் போலவே, என்.எல்.சி.க்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ