வில்லிவாக்கத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி அரியலூரில் கண்டுபிடிப்பு - அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு தாய் நன்றி
சென்னை, 24 மே (ஹி.ச.) சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட 12 வயது சிறுமி விஜயஸ்ரீ, உறவினர்கள் வசிக்கும் அரியலூர் மாவட்டம் தளவாய் கிராமத்திற்கு சென்றிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாயார் விஜயலட்சும
Vill


சென்னை, 24 மே (ஹி.ச.)

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட 12 வயது சிறுமி விஜயஸ்ரீ, உறவினர்கள் வசிக்கும் அரியலூர் மாவட்டம் தளவாய் கிராமத்திற்கு சென்றிருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சிறுமியின் தாயார் விஜயலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நேற்று மாலை 7 மணி அளவில் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்ற குழந்தையை அதன் பிறகு காணவில்லை என்றும், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து உறவினர்களிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அரியலூர் மாவட்டம் தளவாய் கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு குழந்தை வந்திருப்பதாக தொலைபேசியில் தகவல் கிடைத்ததாக விஜயலட்சுமி தெரிவித்தார்.

தற்போது குழந்தையை அழைத்து கொண்டு உறவினர்கள் சென்னை வந்து கொண்டிருப்பதாகவும், வீட்டில் இருந்து செல்லும் போது குழந்தை ரூ.1000 பணத்தையும் எடுத்துச் சென்றிருந்ததாகவும் கூறினார்.

மேலும், குழந்தையை தேடும் பணியில் உதவிய காவல்துறையினருக்கும், வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

குழந்தை பாதுகாப்பாக கிடைத்த தகவலை தொடர்ந்து, தொலைபேசி வாயிலாக ஆதவ் அர்ஜூனாவிடம் சிறுமியின் தாயார் நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், இன்று மாலை சிறுமி வில்லிவாக்கம் வந்த பிறகு, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேரில் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுவதாவது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தந்தை திட்டியதால் மனவருத்தத்தில் குழந்தை வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அரியலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ