மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்
திருவண்ணாமலை, 24 மே (ஹி.ச.) திருவண்ணாமலை - தேனி மாவட்ட எல்லை மலைப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரும் வாரம் நடைபெறவுள்ள திருமண விழாவுக்காக நேற்று இரவு மின் அலங்கார வேலைகள் நடைபெற்றுள்ளன. இந்த அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர
மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்


திருவண்ணாமலை, 24 மே (ஹி.ச.)

திருவண்ணாமலை - தேனி மாவட்ட எல்லை மலைப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரும் வாரம் நடைபெறவுள்ள திருமண விழாவுக்காக நேற்று இரவு மின் அலங்கார வேலைகள் நடைபெற்றுள்ளன.

இந்த அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் கொல்கத்தாவைச் சேர்ந்த சந்து போரா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தங்கி, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மின் அலங்காரம் செய்யும் குழுவில் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது உயர் மின் அழுத்த கம்பியில் எதிர்பாராதவிதமாக சந்து போரா சிக்கியதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனிருந்த மூவரும் அவரைக் காப்பாற்ற முயன்றபோது அவர்களும் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர்.

சக ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் நால்வரையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் சந்து போரா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயமடைந்த மூவருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து தகவலறிந்த தேனி மாவட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

மின் அலங்காரப் பணியின்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதா, மின் வாரியத்தின் முன் அனுமதி பெறப்பட்டதா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த சந்து போராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b