Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மே (ஹி.ச.)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின் தட்டுப்பாட்டை சரிசெய்ய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோடைக்காலங்களில் தமிழகத்தில் மின் தேவை அதிகரிப்பது வழக்கமான ஒன்று என்பதால், அதனை சமாளிக்க முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் கூடுதல் மின் தேவையை கருத்தில் கொண்டு காற்றாலை, சோலார் மற்றும் அனல் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதுடன், மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, தமிழகம் தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டை சந்தித்த நிலையில், அதை சில ஆண்டுகளிலேயே சரிசெய்து தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசின் “மேம்போக்கான மற்றும் உறுதியற்ற நடவடிக்கைகள்” காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், இரவு நேர மின்வெட்டால் மக்கள் தூக்கமின்றி தவிப்பதுடன், பகல் நேர மின்வெட்டால் சமையல் உள்ளிட்ட அன்றாட பணிகளும் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டை எதிர்த்து மக்கள் மின்சார அலுவலகங்களை முற்றுகையிடுவதும், சாலைகளில் போராட்டங்களில் ஈடுபடுவதும் ஊடகங்களில் வெளியாகி வருவதாகவும், சென்னை புறநகர் பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ச்சியான மின்வெட்டு நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருவதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, “இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்” என்ற காரணம் கூறாமல், மின்வெட்டை உடனடியாக போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P