Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 மே (ஹி.ச)
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதை தேமுதிக கடுமையாக கண்டிப்பதாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீர் பங்கை கேட்கும் முழு உரிமையும் தமிழகத்திற்கு உள்ளதாகவும், காவிரி நீர் பிரச்சனை நீண்டகாலமாக நீடித்து வரும் நிலையில், மேகதாது அணை திட்டம் தமிழக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தி, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழக முதலமைச்சர் உடனடியாக கர்நாடக அரசுடனும், மத்திய அரசுடனும், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, மேகதாது அணை திட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டை வடிகாலாக பயன்படுத்தும் வகையில் கர்நாடக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும், தமிழக மக்களின் உரிமைகளையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இல்லையெனில், இந்த விவகாரம் இரு மாநிலங்களுக்கிடையேயான மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும், அந்த சூழ்நிலையை தவிர்க்க மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ