கோவில் பிரசாதங்களில் காலாவதி தேதி கட்டாயம் – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
திருச்சி, 24 மே (ஹி.ச.) திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செயல்படும் பிரசாதக
ரமேஷ்


திருச்சி, 24 மே (ஹி.ச.)

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செயல்படும் பிரசாதக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி கட்டாயமாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆய்வின் போது சில இடங்களில் தேதி விவரங்கள் இல்லாமல் பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறிய அமைச்சர், இனி இதுபோன்ற நடைமுறைகள் அனுமதிக்கப்படாது என்றார்.

இதனை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், விதிமுறைகளை பின்பற்றாத ஒப்பந்ததாரர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

மேலும், கோவில்களில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், கழிப்பறைகளை சுழற்சி முறையில் சுத்தம் செய்து பராமரிப்பு பதிவுகளை முறையாக மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் அனைத்து கோவில்களிலும் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு, கண்டறியப்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

திருவானைக்காவல் கோவிலில் பக்தர்கள் அமர்ந்திருந்த இடத்தில் தூய்மை பணியாளர்கள் தண்ணீர் ஊற்றி விரட்டியதாக வெளியான வீடியோ குறித்து விளக்கம் கோரியுள்ளதாகவும், அறிக்கை கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P