Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 24 மே (ஹி.ச.)
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மாணிக்கம் தாகூர், சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் வெளியிட்ட கருத்துகளை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது பேசிய அவர்,
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் மிகவும் பொறுப்புடன் பேச வேண்டிய நிலையில் இருக்கிறார்.
ஆனால் அவர் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது வருத்தமளிக்கிறது. உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக உயர்த்துவதற்கு தோளில் சுமந்து உதவிய கட்சி காங்கிரஸ் தான்.
அவர் துணை முதலமைச்சராக வர காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருந்ததை மறந்து பேசுவது நன்றி கெட்ட செயல். அவர் அளந்து பேச வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் நடந்த அரசியல் பின்னணி சம்பவங்கள் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற தினமே டெல்லியில் இருந்து பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி நடந்தது.
அதனால்தான் நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்கினோம். தேர்தல் முடிவுகள் தெளிவாகி கொண்டிருந்த நேரத்திலேயே பாஜக அழுத்தத்தில் திமுகவும், அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டன என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் முடிவுகள் வெளியான 4-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் அதிமுக மற்றும் திமுக தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினார். பாஜக இரு கட்சிகளுக்கும் ‘கனெக்டிங் கால்’ போட்டது.
இதுகுறித்து சி.வி.சண்முகத்திடமும் கேட்டால் தெரியும் என்று கூறினார்.
விஜய் முதல்வராக வரக்கூடாது என்பதில் திமுகவும், அதிமுகவும் உறுதியாக இருந்தன. இதையெல்லாம் வெளியில் கூறாமல் நாங்கள் அமைதியாக இருந்தோம். திமுகவின் அனைத்து கொள்கைகளையும் குப்பையில் தூக்கி எறிந்து வைத்து, அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என தவ்விக் குதித்தவர் உதயநிதி ஸ்டாலின் தான் என்றும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.
மேலும், விஜயை முதல்வராக விடக்கூடாது என்று அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கடைசியில் தோற்றுவிட்டார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க திமுக வெளியிலிருந்து ஆதரவு தர முடிவு செய்திருந்தது. இந்த முயற்சிக்கு ஆளுநரின் மறைமுக ஒத்துழைப்பும் இருந்தது” என்றும் அவர் கூறினார்.
“இவை அனைத்தையும் வெளியில் சொன்னால் தவறாகிவிடும் என்பதால் இதுவரை அமைதியாக இருந்தோம். ஆனால் உண்மை மக்கள் முன் வர வேண்டும். விரைவில் பாஜகவின் துணையோடு திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைக்கும் சூழல் உருவாகும். நாடாளுமன்றத்திலும் பாஜகவுக்கு ஆதரவாக திமுக எம்பிக்கள் செயல்படுவார்கள்.
திமுக எந்த கொள்கைகளுக்காக அரசியல் செய்ததோ, அவற்றை அனைத்தையும் விட்டுக்கொடுக்க நேரிடும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN